அரசியல் அரைவேக்காடு யார்?- கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, “அரைவேக்காடு யார்?” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். வாய்மூடி மவுனியாக இருந்து முட்டாள் என்று பிறர் நினைப்பது, வாயைத் திறந்து அனைத்து ஐயப்பாடுகளையும் நீக்கி, தான் ஒரு முட்டாள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவதைவிட மேலானது” என்ற பழமொழிக்கு ஏற்ப மீண்டும் வாயைத் திறந்து, தான் ஒரு அரைவேக்காடு தான் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் கருணாநிதி என தமிழக முதல்வர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “அரசியல் ஆதாயம் அடையலாம் என்று எதிர்பார்த்து “நதிநீர்ப் பிரச்சினையில் கேரளமும், தமிழகமும்” என்ற தலைப்பில் ஒரு வெத்துவேட்டு அறிக்கையை வெளியிட்டு, வாங்கிக் கட்டிக் கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, “அரைவேக்காடு யார்?” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

“வாய்மூடி மவுனியாக இருந்து முட்டாள் என்று பிறர் நினைப்பது, வாயைத் திறந்து அனைத்து ஐயப்பாடுகளையும் நீக்கி, தான் ஒரு முட்டாள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவதைவிட மேலானது” என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. இந்த இலக்கணத்திற்கு ஏற்ப மீண்டும் வாயைத் திறந்து, தான் ஒரு அரைவேக்காடு தான் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் கருணாநிதி.

நதிநீர்ப் பிரச்சனை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்த நான், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு ஆகிய அணைகள் குறித்து 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது?, 2012 ஆம் ஆண்டு வரையிலான விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய புதுப்பிக்கப்பட்ட தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது?, 2013 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது? என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டியதோடு, மேற்படி நான்கு அணைகளும் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற தமிழ்நாட்டின் உரிமை, அணைப் பாதுகாப்பு தேசியக் குழுக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் சுட்டிக் காட்டினேன்.

இது மட்டுமல்லாமல், முல்லை பெரியாறு அணை குறித்து 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் இரண்டாவது பத்தியில், முல்லை பெரியாறு அணை கேரள மாநிலம், தேக்கடி மாவட்டத்தில் இருந்தாலும், இந்த அணை தமிழ்நாட்டிற்குச் சொந்தம் என்றும், தமிழ்நாட்டினால் பராமரிக்கப்படுகிறது என்றும் சுட்டிக் காட்டியிருப்பதையும் விளக்கமாக எடுத்துரைத்து இருந்தேன்.

அதே சமயத்தில், மேற்படி அணைகள் கேரளாவுக்குச் சொந்தமானவை என்று எந்தப் பதிவேட்டிலும் சுட்டிக் காட்டப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் ஆதாயம் தேடும் வகையில், என்னுடைய பதில் அறிக்கையில் உள்ள உண்மை விவரங்களையும் படித்து புரிந்து கொள்ளாமல், தேசியப் பதிவேடுகளையும் படித்துப் பார்க்காமல், யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து கருணாநிதி லாவணி பாடி ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கையின் மூலம் தான் ஒரு குழப்பவாதி என்பதை படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்.

2012 ஆம் ஆண்டு விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை குறித்த விவரங்கள் தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் சேர்க்கப்பட்டதால் தான் முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய அணைகள் கேரள மாநிலத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன என்று நான் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டி, “2012 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா தானே பொறுப்பு வகித்தார்? தேசியப் பதிவேட்டில் இந்த நான்கு அணைகளும் 2012 ஆம் ஆண்டு கேரள மாநில அணைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஜெயலலிதா குரல் கொடுத்திருக்க வேண்டாமா? இது குறித்து மத்திய அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்க வேண்டாமா?” என்று பதில் அளித்து இருக்கிறார் கருணாநிதி.

நான் முதலமைச்சராக இருந்ததால் தான், நான் குரல் கொடுத்ததால் தான், நான் வலியுறுத்தியதால் தான் கேரள மாநிலத்தின் கீழ் வரும் முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய அணைகளின் பெயருக்கு அருகிலேயே, இந்த அணைகள் தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்ற வாசகமும்; தமிழ்நாட்டிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலின் பின் குறிப்பில், கேரளாவில் உள்ள மேற்படி அணைகள் தமிழ்நாடு பொதுப் பணித் துறையினரால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்ற வாசகமும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இது மட்டுமல்லாமல், மேற்படி அணைகள் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற கோரிக்கையும் அணைப் பாதுகாப்பு தேசியக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றால், தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மூலம், தி.மு.க. தலைவர் கருணாநிதியால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்னால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி தன்னுடைய அறிக்கையின் மூலம், இந்தப் பிரச்சனையில் மத்திய அரசை தான் தட்டிக் கேட்காததை ஒப்புக் கொண்டிருக்கிறார். துரோகத்தை மட்டுமே தன்னால் செய்ய முடியும் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. எனவே, கருணாநிதியின் இந்த அறிக்கை யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல் அமைந்துள்ளது.

காவிரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை சத்தம் போடாமல் திரும்பப் பெற்ற கருணாநிதி; கச்சத்தீவு மத்திய அரசினால் இலங்கைக்கு தாரைவார்க்கப்படப் போகிறது என்பதை முன் கூட்டியே தெரிந்தும், அதைத் தடுக்காமல் வாய்மூடி மவுனியாக இருந்த கருணாநிதி; ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, முல்லை பெரியாறு பிரச்சனையில் மத்திய அரசையோ, கேரள அரசையோ கண்டிக்கக் கூட திராணியில்லாமல் மூலையில் முடங்கிக் கிடந்த கருணாநிதி; ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்த கருணாநிதி; தமிழகத்தின் உரிமைகளை பாதுகாத்து வரும் என்னைப் பற்றி குறை கூறி பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

“நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை” என்று ராகுல் காந்தி கூறிய போது, அதைத் தட்டிக் கேட்காமல் தொடர்ந்து ஆட்சியிலிருந்தது குறித்தோ; நதிநீர் இணைப்புத் திட்டத்தினை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் சிறப்புக் குழுவினை அமைக்க வேண்டும் என்று கூறி, அதன் அடிப்படையில் ஓர் ஆண்டு கழித்து சிறப்புக் குழுவினை அமைத்தாலும், அந்தக் குழுவின் கூட்டத்தை ஒரு முறை கூட கூட்ட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நான் எழுப்பிய கேள்வி குறித்தோ, பதில் அளிக்க வக்கில்லாத கருணாநிதி; அந்த வழக்கை தொடுத்ததே கழக வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் தான் என்று கூறியிருப்பது தான் “பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கு விலை சொல்வது” என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்த கே.எஸ். இராதாகிருஷ்ணன், பல்வேறு காலங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்தவர். மூன்றாவது முறையாக தி.மு.க.வில் இணைந்து தற்போது பணியாற்றி வருகிறார். இவர் தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்த வழக்கு, தி.மு.க.வினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? இதை வைத்து நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க. போராடியதாக உரிமை கொண்டாட கருணாநிதி முயல்வது சிறுபிள்ளைத்தனமானது.

1994 ஆம் ஆண்டே யமுனை நதி பற்றி ஒரு நாளிதழில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஒரு வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனுடன், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஓர் இடைக்கால மனுவையும், 2002 ஆம் ஆண்டு தனியே ஒரு ரிட் மனுவாக உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. இராதாகிருஷ்ணனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு, கடந்த 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு ராதாகிருஷ்ணனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூலம் மட்டுமே கிடைத்தது என்று கருத முடியாது.

கருணாநிதியால் குறிப்பிடப்பட்ட இதே ராதாகிருஷ்ணன் “கங்கையும் – காவிரியும் குமரியைத் தொடுக” என்ற தலைப்பில் ஓர் கட்டுரையை 2007 ஆம் ஆண்டு எழுதி இருக்கிறார். அது அவருடைய இணைய தளத்திலேயும் உள்ளது. அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சிலவற்றை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

“கடந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நதிநீர் இணைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அது குறித்து ஆராய சுரேஷ் பிரபு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு தன் அறிக்கையை கடந்த 2005 டிசம்பரில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வந்து அக்குழுவின் காலத்தை நீட்டிக்காமல் விட்டதால் நதிநீர் இணைப்பு குறித்து ஐந்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் வீணடிக்கப்பட்டன. சுரேஷ் பிரபு குழு இந்திய நதி நீர்களை இணைக்க 1,200 கோடி ரூபாயிலிருந்து 1,500 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிட்டது. இன்றைக்குள்ள மன்மோகன் சிங் அரசு சற்றும் நாட்டின் நலனைச் சிந்திக்காமல் இந்தத் திட்டத்துக்கு ‘அம்போ’ என்று மங்களம் பாடிவிட்டது. இது எல்லாம் தெரியாமல் தமிழக முதலமைச்சர் கருணாநிதி டெல்லியைப் பார்த்து நதிநீர் இணைக்க வேண்டும் என்று சொல்கின்றார். இதில் விஷய ஞானம் தெளிவில்லாமல் பேசுவது மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும் …” என்று கூறியிருக்கிறார்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றினார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நதிநீர்ப் பிரச்சனை மட்டுமல்ல, அனைத்துப் பிரச்சனைகளிலும் மக்களை ஏமாற்றுவது தான் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வேலை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, “மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகள் உட்பட அனைத்து நதிகளும் தேசிய நதிகள் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்றும், நதி நீரை முறையாக பயன்படுத்தும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்து 26.4.1982 அன்றே அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அடுத்தபடியாக, “முதலில் தீபகற்ப நதிகளையாவது இணைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை அவசர அவசியம் கருதி, உடனடியாக நிறைவேற்றும் பணி மத்திய அரசால் தொடங்கப் பெற இந்த அரசு தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொள்ளும்” என்று 2007-2008 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டு உள்ளார். 2004 முதல் மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. மாநிலத்தில் 2006 முதல் 2011 வரை மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. இப்படி இருக்கும் போது, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற என்ன முயற்சி எடுத்தார் கருணாநிதி? ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை கருணாநிதி. நதிநீர் இணைப்பு குறித்து அறிந்தவர்கள் இதையெல்லாம் மறக்கவில்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கடைசியாக, தன்னுடைய ஆட்சிக் காலத்தில், “…திருச்சிக்கு அருகே மாயனூரில் உபரி நீரை வறண்ட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ், காவிரியின் குறுக்கே கட்டளையில் கதவணை கட்டும் பணிகள் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக 369 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. பெண்ணை ஆற்றுடன் செய்யாற்றை இணைக்கும் திட்டத்திற்கு 174 கோடி ரூபாய்க்கான கருத்துரு மத்திய அரசின் நீர்க் குழுமத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது” என்று தனது அறிக்கையில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இது குறித்த உண்மை நிலையை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

மாயனூர் கதவணையைப் பொறுத்த வரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 189 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், 96 கோடி ரூபாய் தான் செலவிடப்பட்டது. அடைப்பான்கள் தயாரித்தல், அதை நிறுவுவதற்கான பகுதியினை அமைத்தல், அடைப்பான் நிறுவுதல், சிமெண்ட் கான்கிரீட் பிளாக்குகள் அமைக்கும் பணிகள் என பல்வேறு பணிகள் தொடங்கப்படவே இல்லை. நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்தத் திட்டத்திற்கு 234 கோடி ரூபாய் அளவுக்கு திருத்திய ஒப்புதல் வழங்கி, கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 135 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, 25.6.2014 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டது.

தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்தை எடுத்துக் கொண்டால், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்ததாக கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். உண்மை நிலை என்னவென்றால், இந்தத் திட்டத்தை நான்கு நிலைகளில் செயலாக்க 2008 ஆம் ஆண்டு ஆணை

வெளியிடப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணையே 2010 ஆம் ஆண்டு தான் வெளியிடப்பட்டது. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தான், முதல் இரண்டு நிலைகளுக்கான 190 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது புதிய நில எடுப்புச் சட்டத்தினை மத்திய அரசு இயற்றியுள்ளதால், இந்தச் சட்டத்தின்படி மூன்றாம் மட்டும் நான்காம் நிலைகளுக்கு நிலங்களை கையகப்படுத்த ஆணை வெளியிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் இரண்டு நிலைகளுக்கு 57.06 கிலோ மீட்டர் நீளத்திற்கான கால்வாய் அமைக்கப்பட வேண்டும். 22.84 கிலோ மீட்டர் நீளத்திற்கான கால்வாய் மட்டுமே முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் அமைக்கப்பட்டது. மீதமுள்ள 34.22 கிலோ மீட்டர் நீளத்திற்கான கால்வாய் அமைப்பதில் எனது தலைமையிலான அரசால் 27.82 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி, நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையால் நிலுவையில் உள்ளது. இதே போன்று, முதல் இரண்டு நிலைகளுக்கு 168 குறுக்கு கட்டுமான பணிகள் அமைக்கப்பட வேண்டும்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெறும் 23 குறுக்குக் கட்டுமானப் பணிகளே முடிக்கப்பட்டன. எனது தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் 100 கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 45 குறுக்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு அறிக்கையை அங்கீகரிக்கப்பட்ட கலந்தறிவு நிறுவனத்தின் மூலம் ஆய்வு செய்யப்படவில்லை. இந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

கடைசியாக பெண்ணையாற்றுடன் செய்யாற்றினை இணைக்கும் திட்டம் குறித்து கருணாநிதி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி பெறும் கோரிக்கை 2008 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தும், 2011 ஆம் ஆண்டு ஆட்சியை விட்டுச் செல்லும் வரை மத்திய அரசிடமிருந்து இதற்கான நிதி உதவியை கருணாநிதியால் பெற முடியவில்லை. புதிய நில எடுப்புச் சட்டத்தின்படி நிலத்தை கையகப்படுத்த கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியிருப்பதால், இத்திட்ட மதிப்பீடு 360 கோடி ரூபாயாக திருத்தி அமைக்கப்பட்டு, விரைவுபடுத்தப்பட்ட பாசனத் திட்டத்தின்கீழ் நிதி உதவி கோரி மத்திய நீர் வளக் குழுமத்திற்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது.

என்னுடைய விளக்கங்களிலிருந்து, கருணாநிதியால் குறிப்பிடப்பட்ட மேற்காணும் மூன்று திட்டங்களுக்கு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்னுடைய ஆட்சிக் காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக்கப்பட்டு உள்ளது.

எனது தலைமையிலான அதிமுக அரசுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமையின் வெளிப்பாடாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற தவறான அறிக்கைகளை கருணாநிதி வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். 1.7.2014 அன்று “கேள்வியும் நானே – பதிலும் நானே” என்ற பாணியில் வெளியிடப்பட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில், “அ.தி.மு.க. அரசு சார்பில் பத்து இடங்களில் ‘அம்மா’ மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்திருக்கிறாரே” என்று தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு, “அடுத்த அறிவிப்பினை நீங்கள் பார்க்கவில்லையா? தமிழகத்தில் 100 இடங்களில் “அம்மா வெற்றிலை-பாக்கு கடை” களைத் திறந்து வைத்து, அந்த வியாபாரத்தை அமைச்சர்களே முன் நின்று நடத்தப் போகிறார்களாம்” என்று வயிற்றெரிச்சலுடன் தனக்குத் தானே பதில் அளித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இது போன்று தனக்குத் தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, பதில்களை அளிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தமிழக மக்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.

“ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை – ஊக்கா ரறிவுடையார்” என்றார் வள்ளுவர். அதாவது, “பெரிய ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்து, இருக்கின்றதையும் இழந்துவிடக் கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்” என்பது இதன் பொருள். அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைத்து, தன்னுடைய அரசியல் அறியாமையை தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி. இதிலிருந்து “அரசியல் அரைவேக்காடு யார்?” என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்” என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Check Also

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அதிரடி.. மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு‌.‌..

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வெங்கடேச கிராமிணி தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் மூலம் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர்‌. இந்நிலையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *