இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய பிரதான எதிர்கட்சியான பாஜகவை அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு அமைப்பு வேவு பார்த்ததாக வெளியான செய்திகளால், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து புகார் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவால் ஏற்கமுடியாதவை என்று வர்ணித்திருக்கும் இந்திய அதிகாரிகள் இனிமேல் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்று அமெரிக்கா உறுதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.
அமெரிக்க அரசின் புலனாய்வுத்துறையால் வேவு பார்க்கப்பட்ட வெளிநாட்டு அரசியல் கட்சிகள் பட்டியலில் பாஜகவும் இருந்ததாக, அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி எட்வர்ட் ஸ்நோடனிடம் இருந்து வாஷிங்க்டன் போஸ்ட் பத்திர்கைக்கு கசிந்திருக்கும் ஆவணங்கள் தெரிவித்திருந்தன.
மேமாதம் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவில் ஆட்சிக்கு வந்தது முதல் இந்திய அரசுடனான அமெரிக்காவின் உறவுகளை மேம்படுத்துவதில் ஒபாமா தலைமையிலான அரசாங்கம் முயன்றுவருவதாக கூறும் செய்தியாளர்கள், அந்த முயற்சிகளுக்கு இந்த செய்தி சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதுகிறார்கள்.