தென் கொரியாவின் இன்சியானில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 10-வது நாளில், இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் கிடைத்தன.
டென்னிஸ் ஆட்டத்தின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா – சாகேத் மைனேனி ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது. மகளிருக்கான வட்டு எறிதலில் சீமா புணியா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
மேலும் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் ஜெய்ஷா, மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் நவீன் குமார் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
முன்னதாக, டென்னிஸ் ஆட்டத்தின் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் சாகேத் மைனேனி – சனம் சிங் ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. அதேபோல, மல்யுத்தத்தில் பஜ்ரங் வெள்ளிப் பதக்கத்தையும், நரசிங் யாதவ் வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர்.
இதன் மூலம், புள்ளிகள் பட்டியலில் இந்தியா 42 பதக்கங்களுடன் (6 தங்கம், 7 வெள்ளி, 29 வெண்கலம்) 9-வது இடத்தில் நீடிக்கிறது.
சாதித்தது சானியா- கேத் ஜோடி
ஆடவருக்கான இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த இந்தியாவின் சாகேத் மைனேனி, சனம் சிங் ஜோடி, கொரியாவின் யங்கியு லிம், ஹியான் சுங்கை எதிர் கொண்டனர். இதில் 5-7, 6-7(2) என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வியடைந்தது. இதனால், சாகேத் – சனம் சிங்குக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.
இதன்பின், கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் முன்னணி வீராங்கனையான சானியா, சாகேத்துடன் ஜோடி சேர்ந்து களம் புகுந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாகேத் தோல்வியடைந்ததால், கலப்பு இரட்டையர் பிரிவிலும் அது எதிரொலிக்குமோ என்ற கருத்து நிலவியது.
ஆனால், இறுதிச் சுற்றில் சீன தைபேயின் ஹாவ் சிங் சான், ஹுசீன் யின் பெங் ஜோடியை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தியது இந்திய ஜோடி. இந்த முறை சாகேத் மைனேனி தனது பிரத்யேக “சர்வ்’கள் மூலம் மிரட்டினார். அதேபோல, முன் வரிசையில் நின்றிருந்தபோது அவர் சில அற்புதமான ஷாட்களை அடித்தார்.
இதன் மூலம் பங்கேற்ற முதல் ஆசியப் போட்டியிலேயே தங்கம் வென்று சாதித்தார் சாகேத் மைனேனி. சானியா ஆசியப் போட்டியில் எட்டாவது பதக்கத்தைப் பெற்றார்.