இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இமாச்சல பிரசேத்தில் உள்ள மனாலிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் நதியின் அழகை ரசித்தனர்.
அப்போது மாணவ, மாணவியரில் சிலர் ஆற்றின் நடுவே இருந்த பெரிய பாறையில் நின்று புகைப்படம் எடுக்க விரும்பினர்.
மாணவர்கள் ஆற்றில் கிடந்த சிறு சிறு பாறைகள் மூலம் அந்த பெரிய பாறையை அடைந்து புகைப்படம் எடுத்தனர்.
மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கையில் லார்ஜி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 24 மாணவ, மாணவியர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மாணவ, மாணவியர் ஆற்றின் நடுவே உள்ள பாறையில் நின்று புகைப்படம் எடுத்ததும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது அவர்கள் செய்வதறியாது திணறிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை அமருஜலா டாட் காம் என்ற ஆன்லைன் இந்தி செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாணவ, மாணவியர் அடித்துச் செல்லப்பட்டபோது அவர்கள் கதறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கரையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் தான் இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.
நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் 24 மாணவ, மாணவியரால் தப்பிக்க முடியாமல், இறுதியில் அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அமைதி நிலவுவது வீடியோவில் உள்ளது.