சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மாநாட்டில், ஐசிசி கவுன்சிலின் 52 உறுப்பினர்கள் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து, சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஐசிசி தலைவராக உறுதிசெய்யப்பட்டதை மிகுந்த கவுரமாகக் கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டின் வலுவான வளர்ச்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.
கிரிக்கெட் விளையாட்டு மேலும் பிரபலமடைவதற்கும், வளர்ச்சி பெறுவதற்கும் வேண்டிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். இந்த இலக்கை எட்டுவதற்கு, உள்நாட்டு வீரர்களின் மேம்பாட்டுக்கு வழிவகுப்பது அவசியம்.
ஐசிசி தலைவர் பதவியில் இருந்து விலகும் ஐசக், சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. ஐசிசி தலைவர் பதவிக்கு அவர் முன்னுதாரணமாகவே திகழ்கிறார்” என்று சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.