தில்லியில் இருந்து திப்ருகர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 2 மணி அளவில் பீகார் மாநிலம் கோல்டன்கார்க் அருகே திடீரெனெ தடம் புரண்டது.எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தினால் 4 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்துள்ளனர்.
டெல்லி- திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து நேற்று (செவ்வாய்கிழமை) புறப்பட்டது. பிஹார் மாநிலம் சாப்ரா ரயில் நிலையத்திற்கு அதிகாலை 2 மணி அளவில் வந்தடைந்தது. சாப்ரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தடம் புரண்டது.
இது குறுத்து, ரயில்வே செய்தி தொடர்பாளர் சக்சேனா கூறுகையில்: “பி-1, பி-2, பி-3, பி-4 ஆகிய 4 பயணிகள் பெட்டி மற்றும் சமையல் அறை கொண்ட பெட்டி ஆகியன தலைகீழாக கவிழ்ந்தன. பி-5 முதல் பி-10 வரையிலான பெட்டிகள் தடம்புரண்டன” என்றார்.
ரயில்வே அமைச்சர் இரங்கல்:
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, மீட்புப் பணிகளை முடுக்கிவிடவும், காயமடைந்த பயணிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை மேற்கொள்ளவும் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரயில் விபத்து பின்னணியில் மாவோயிஸ்டுகள் சதி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முதற்கட்டமாக விசாரணை அடிப்படையில், தண்டவாளத்தில் குண்டுவெடிப்புக்கான அறிகுறி இருப்பதாகவும் அதுவே ரயில் தடம்புரள காரணம் எனவும் ரயில்வே வாரிய சேர்மன் அருனேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் கோல்டன் கஞ் ரயில் நிலையத்தில் இருந்து 60 கி.மீ தூரத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்தார். இரு சம்பங்கள் குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இழப்பீடு அறிவிப்பு:
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சமும், சிரிய அளவிளான காயமடைந்தவர்களுக்கு ரூ. 20 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மாநில அரசு உதவி:
பிஹார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி, ரயில் விபத்தில் பலியான 4 பேர் குடும்பத்தினருக்கும் ரூ.50,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மோடி இரங்கல்:
டெல்லி – திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 4 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “ரயில் விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். விபத்தில் 4 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சரிடமும் தகவல்களை கேட்டறிந்தார்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.