மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் ராஜினாமா

மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவாண், வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டதையடுத்து, அக்கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்ததால் சவாண் பதவி விலகினார்.

“மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவை வெள்ளிக்கிழமை சந்தித்த பிருத்விராஜ் சவாண், தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்’ என்று உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இதையடுத்து, பிருத்விராஜ் சவாணையே இடைக்கால முதல்வராக நீடிக்கச் செய்வதா? அல்லது அந்த மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைப்பதா? என்பது குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காங்கிரஸ் கூட்டணியில் 15 ஆண்டுகளாக இடம்பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வியாழக்கிழமை விலக்கிக் கொண்டது.

இதையடுத்து, ஆளுநரை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், துணை முதல்வருமான அஜித் பவார், பிருத்விராஜ் சவாண் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தனது கட்சி விலக்கிக் கொண்டதாகக் கூறினார்.

இந்நிலையில், ஆளுநரை வெள்ளிக்கிழமை சந்தித்த மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான ஏக்நாத் காட்úஸ, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு புகாரால், மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை அசோக் சவாண் கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜிநாமா செய்ததை அடுத்து, பிருத்விராஜ் சவாண் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

அதன்பிறகு, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மீதான நீர்ப்பாசன முறைகேடு வழக்குகளில் எந்தவித ஒளிவு மறைவுமின்றி பிருத்விராஜ் சவாண் நடந்து கொண்டார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட, கராட் தொகுதியில் சனிக்கிழமை அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

Check Also

​மாட்டிறைச்சி விவகாரம்: காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்எல்ஏ மீது பாஜக எம்எல்ஏ தாக்குதல்

மாட்டிறைச்சி விருந்து விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று பெரும் அமளியை ஏற்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏவுடன் பாஜக எம்எல்ஏ கைகலப்பில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *