ஸ்காட்லாந்து பிரிவினை வாக்கெடுப்பு தோல்வி: 55.30 % பேர் பிரிவினையை நிராகரித்தனர்

யுனைட்டட் கிங்டத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.30% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.70% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.

வாழ்நாள் வெற்றியை வாய் நிறைந்த சிரிப்போடு கொண்டாடி மகிழும் வென்றவர் தரப்பு

ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப் பிரதேசங்களில், டண்டி, கிளாஸ்கோ, நார்த் லங்கன்ஷெர் மற்றும் வெஸ்ட் டன்பர்ட்டன்ஷெர் ஆகிய நான்கு பிரதேசங்களில் மட்டுமே ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிந்து செல்லவேண்டும் என்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

மீதமுள்ள 28 உள்ளூராட்சி மன்றங்களின் வாக்காளர்களின் பெரும்பான்மையானவர்கள் ஸ்காட்லாந்து பிரிந்து செல்லக்கூடாது என்றே வாக்களித்திருந்தனர். இதில் ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பரா வாக்காளர்களும் பிரிவினைக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். எடின்பரா வாக்காளர்களில் 61.10 சதவீதம் பேர் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 20,01,926 பேரும், ஸ்காட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,617,989 பேரும் வாக்களித்திருந்தனர். இரு தரப்பாருக்கும் இடையில் 3,83,937 வாக்குகள் வித்தியாசம் இருக்கின்றன.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்ததைவிட, பிரிவினையை எதிர்ப்பவர்களின் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்திருப்பதை இன்று வெளியான இறுதிமுடிவுகள் காட்டுகின்றன.

தோல்வியின் வலிக்கு தோழமையின் தோளில் ஆறுதல் தேடும் தோற்றவர் தரப்பு

நேற்று வியாழக்கிழமை ஸ்காட்லாந்து முழுவதும் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குப்பதிவில் வாக்களிக்க தகுதிபெற்ற மொத்த வாக்காளர்கள் 42,83,392 பேர். இதில், 84.59 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஸ்காட்லாந்தின் வாக்குப்பதிவு வரலாற்றில் மிக அதிக சதவீத வாக்குப்பதிவாக கருதப்படும் இந்த கருத்தெடுப்பில் 3,429 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *