தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு சார்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 2 பிரதான தேர்வின்போது இணையதளத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட 48 பேர் தேர்வாணைய அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை மறைமலைநகர் தேர்வு மையத்தில் தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி குரூப் 2-இல் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வை நடத்தின. இதில் மொத்தம் 6 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 11,497 பேர் பிரதானத் தேர்வுக்கு தகுதிப் பெற்றனர்.
இவர்களுக்கான தகுதித் தேர்வு சென்னை, தஞ்சாவூர், திருச்சி, கோயம்முத்தூர், திருநெல்வேலி, சேலம், சிதம்பரம் ஆகிய 8 பகுதிகளில் 24 மையங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
காலையில் பொது அறிவுத் தேர்வு கணினி வழியாகவும், பிற்பகலில் விரிவான விடை எழுதும் தேர்வும் நடந்தது. இதில் கணினி வழித் தேர்வின்போது சில மையங்களில் இணையதளம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை பகுதிக்குள்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரை அடுத்த சட்டமங்கலம் ஏ.ஆர்.எம். தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் வேலூரைச் சேர்ந்த 300 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 270 பேர் தேர்வு எழுத வந்தனர். கணினி வழித் தேர்வு நேரத்தின்போது இணையதள கோளாறு காரணமாக 48 பேர் தேர்வு எழுத முடியவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தேர்வு மையத்துக்கு வந்த தேர்வாணையக் குழுத் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் “பாதிக்கப்பட்டவர்கள், அதே தேர்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுதலாம்’ என உறுதியளித்தார்.
அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தேர்வு நடைபெற்றது. இதனையொட்டி, தேர்வு மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
முன்னதாக தேர்வு எழுத வந்தவர்கள் முதல்நாள் தேர்வு எழுத முடியாமல் மன உளைச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் தேர்வை நன்றாக எழுத முடியுமா? என்பது சந்தேகம் எனவும் தங்களுக்கு கட் ஆப் மதிப்பெண் குறைவாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினர்.