ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் உத்தரவு

ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்:

சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களுடைய நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.

அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க எனது முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டிருந்தேன். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இந்தக் கோரிக்கைகளை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க ஆணையிட்டுள்ளேன்.

இது தொடர்பாக அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, 4500 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம், மாநிலம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடையும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Check Also

சூரிய ஒளி மின் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

நடப்பாண்டு இறுதிக்குள் சூரிய மின்னுற்பத்தி திட்டங்களில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழும் என மாநில மின்துறை அமைச்சர் நத்தம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *