மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்: அமெரிக்கா!

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போன  பின்பும் கிட்டதட்ட நான்கு மணிநேரம் விண்ணில் பறந்துள்ளதால் அதை யாராவது கடத்தி, ரகசியமான இடத்தில் மறைத்து வைத்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் கருதுகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு சென்ற விமானம் மாயமானது. அதில் பெரும்பாலான பயணிகள் சீனர்கள். அந்த விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்ன ஆனது என்பதை அறிய அவர்களின் குடும்பத்தார் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகு 4 மணிநேரம் விண்ணில் பறந்ததாக அமெரிக்க விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

விமானத்தை தேடும் படலத்தில் அமெரிக்காவும் உதவி வருகிறது. இந்நாட்டை சேர்ந்த வால் ஸ்டிரீட் பத்திரிகையில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், ‘கோலாலம்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் ரேடியோ தொடர்பை விமானம் இழந்த பிறகும், 4 மணி நேரம் அது பறந்துள்ளது.

விமானத்தின் இன்ஜின்களில் இருந்து கிடைத்த தகவலின் மூலம் இது கண்டறியப்பட்டு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தின் இன்ஜின்களை பராமரிக்கும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக, இன்ஜின்களின் செயல்பாடு தரை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஒருபுறம் நிலவி கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட இந்த புதிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று மலேசிய போக்குவரத்து துறை தற்காலிக அமைச்சர் ஹிஷமுதின் அகமது தெரிவித்தார். விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்ற தகவல் உறுதி செய்யப்படும் வரையில், விமானத்தை தேடும் பணியை நிறுத்த மாட்டோம் என்றும் அவர் உறுதியாக கூறினார்.

மேலும் விமானம் மாயமான பிறகு கூடுதல் மைல்கள் பயணித்துள்ளதால் அதை யாராவது கடத்தி, ரகசிய இடத்தில் வைத்திருக்கக்கூடும் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் கருதுகிறார்கள். விமானத்தையும், பயணிகளையும் ரகசியமான இடத்தில் வைத்து அதை வைத்து கடத்தியவர்கள் பயன் பெற நினைக்கலாம் என்ற கோணத்தில் அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மாயமான விமானத்தின் அடுத்த தேடுதல் பணியை இந்திய பெருங்கடலில் துவங்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் பல விமானங்களும், கடற்படை கப்பல்களும் விரைந்துள்ளன.

Check Also

உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: 295 பேர் பலி

295 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் வியாழக்கிழமை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 280 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *