24 மணி நேரத்துக்குள் 11 லட்சம் மக்கள் காசாவை விட்டு வெளியேற வேண்டும்.இஸ்ரேல் உத்தரவால் பதற்றம்

ஜெருசலேம்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 7வது நாளை எட்டி உள்ளது. காசா நகரில் வசிக்கும் 11 லட்சம் பேர் 24 மணி நேரத்தில் வெளியேற இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீன நாட்டில் உள்ள காசா பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த 7ம் தேதி திடீரென இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தி ஏராளமான இஸ்ரேலியர்களை கொன்றனர். நூற்றுக்கணக்கான மக்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர். 5 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குலுக்கு இஸ்ரேல் கடந்த 7 நாட்களாக பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. மேலும் இஸ்ரேல் முற்றுகையால் குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தத்தளித்து வருகிறார்கள். காசாவில் மட்டும் 1350 பேர் பலியாகி விட்டனர். இஸ்ரேல் தரப்பில் 1300 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது காசா மீது தரைவழித்தாக்குதல் நடத்த இஸ்ரேல் முழுதயார் நிலையில் உள்ளது. அதற்கு முன்னதாக காசா நகரில் வசிக்கும் 11 லட்சம் பொதுமக்களை காலி செய்யுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

அவர்களுக்கு 24 மணி நேரம் மட்டுமே கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காசா பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மின்சாரம்,குடிநீர் மற்றும் மருந்து எதுவுமே கிடைக்காமல் காசா பகுதி மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களின் சடலங்களால் காசாவில் உள்ள மருத்துவமனைகளின் பிணவறைகள் நிரம்பி வழிகிறது. இதற்கிடையே இஸ்ரேல் உத்தரவுப்படி காசா மருத்துவமனைகள் காயம் அடைந்தவர்களை வெளியேற்ற முடியாது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலும் 14 பேர் பற்றிய தகவல் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள மற்ற அமெரிக்கர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

250 பேரை மீட்ட இஸ்ரேல் ராணுவம்
ஹமாஸ் பிடியில் இருந்த 250 பிணைக்கைதிகளை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக மீட்ட வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் இதுவரை காசா மீது 6 ஆயிரம் குண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு முக்கியமாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளை பாஸ்பரஸ் கொட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

கோட்டைவிட்ட மொஸ்ஸாட்
உலகிலேயே மிகப்பெரிய உளவு அமைப்பு கொண்ட நாடு இஸ்ரேல். அமெரிக்காவின் எப்பிஐ எப்படி இரட்டை கோபுர தாக்குதலை கோட்டைவிட்டதோ, அதே போல் தான் இஸ்ரேலின் மொஸ்ஸாட் தற்போது ஹமாஸ் நடத்திய தாக்குதலையும் கோட்டை விட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள மிகவும் திறன்வாய்ந்த மற்றும் அதிநவீன உளவுத் துறை உள்ள நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. இஸ்ரேலில் ‘ஷின் பெட்’ என்பது அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு சேவைப் பணியில் உள்ளது.

இது அமெரிக்காவின் எப்பிஐ போன்றது. உள்நாட்டுக்குள் இருக்கும் அச்சுறுத்தல்களை இது கண்காணிக்கிறது. நாட்டுக்கு வெளியில் இருக்கும் அச்சுறுத்தல்ளை கண்காணிக்கும் வகையில் சிஐஏவுக்கு இணையாக இஸ்ரேலிடம் ‘மொஸ்ஸாட்’ உள்ளது. மூன்றாவதாக, அமெரிக்க ராணுவப் புலனாய்வு முகமையைப் போல, இஸ்ரேலிடம் ‘இஸ்ரேல் ராணுவப் புலனாய்வு முகமை’ உள்ளது. இதை எல்லாம் மீறி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது தான் இப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

18 ஆயிரம் பேர் சிக்கித்தவிக்கும் நிலையில் இஸ்ரேலில் மீட்கப்பட்ட 212 இந்தியர்கள் நாடு திரும்பினர். இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பொருட்டு, ஒன்றிய அரசு தொடங்கியுள்ள ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தின் கீழ் நேற்று காலை 212 இந்தியர்கள் டெல்லி விமானம் நிலையம் வந்தடைந்தனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரால் இஸ்ரேலில் உள்ள 18 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தியாவில் இருந்து சென்ற சிறப்பு விமானம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை சென்றடைந்தது.

அங்குள்ள பென்குரியன் விமானநிலையத்தில் இருந்து நேற்று 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு டெல்லி வந்தடைந்தது. அவர்களை ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். அப்போது அவர் கூறுகையில், ‘இஸ்ரேலில் தவிக்கும் அனைத்து இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள். பிரதமர் மோடி, இந்தியர்களை மீட்டு வருவதில் தீவிர கவனம் செலுத்தி உள்ளார். ஏர் இந்தியா விமானத்தின் விமானக் குழுவினர், உரிய நேரத்தில் செயல்பட்டு வருகின்றனர்’ என்றார்.

* இந்தியர்களின் பாதுகாப்பை மோடி தலைமை உறுதி செய்யும்
பா.ஜ தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில்,’ இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் கொண்ட முதல் குழுவினரை பாதுகாப்பாக மீட்டு வந்ததற்காக அரசுக்கு நன்றி. இது ஒரு அற்புதமான மீட்பு பணி. ஏனெனில் ஒன்றியத்தில் ஒரு வலுவான அரசாங்கம் உள்ளது. அதற்கு மக்கள் நலன் முதன்மையானது. அந்த அரசுக்கு பின்னால் 140 முக்கிய இந்திய சகோதர சகோதரிகளின் பலம் உள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்

*மாமனார், மாமியாரை காப்பாற்ற கதறும் ஸ்காட்லாந்து பிரதமர்
ஸ்காட்லாந்து பிரதமர் ஹம்சா யூசுப்பின் மாமனார், மாமியார் தற்போது காசாவில் உள்ளனர். காசாவில் உள்ள மக்களை இஸ்ரேல் வெளியேற உத்தரவிட்ட தருணத்தில் இதை நம்பி வெளியேறும் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது மாமியார் எலிசபெத் எல்-நக்லா எக்ஸ் பதிவில்,’ காசா மக்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்ட பிறகு 11 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்கிறாா்கள்.

அவர்களுக்கு உணவு இல்லை, தண்ணீர் இல்லை. இதைவிட முக்கியமாக வெளியேறும்போது அவர்கள் மீதும் குண்டு வீசுகிறார்கள்’என்று அவர் கூறினார். ஸ்காட்லாந்தில் உள்ள டண்டீயில் இருந்து எலிசபெத் எல்-நக்லா, தனது கணவர் மகேடுடன் காசாவில் உள்ள உறவினர்களைப் பார்க்கச் சென்றபோது அங்கு சிக்கிக்கொண்டனர். தற்போது அவர்களை மீட்க ஸ்காட்லாந்து பிரதமர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

13 பிணைக்கைதிகளை கொன்ற இஸ்ரேல்
ஹமாஸ் பிடியில் இருந்த 13 பிணைக்கைதிகளை இஸ்ரேலிய ராணுவம் கொன்றுவிட்டதாக ஹமாஸ் தெரிவித்து உள்ளது. இதில் வெளிநாட்டினரும் இருந்தனர் என்று ஹமாஸ் தெரிவித்து உள்ளது. இதை இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,’ ஹமாஸின் பொய்களை நம்ப மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்தது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தியா, இலங்கை, ஈராக் உட்பட உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஈரான் நாட்டில் டெஹ்ரானில் நூற்றுக்கணக்கான மக்கள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர். இதே போல் பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, ஜோர்டான், யேமன் நாடுகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

போர் பரவும்: ஈரான் எச்சரிக்கை
காசாவில் நடக்கும் போர் பதற்றம் லெபனானில் பரவாமல் இருக்க ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹோசைன் அமரப்துல்லாகியன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் லெபனானை பாதுகாப்பதற்காக பெய்ரூட் செல்ல உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,’ காசா பகுதிக்கு எதிரான அழிவுகரமான போரை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் காசாவுக்கு ஆதரவாக அப்பகுதி முழுவதும் போர் பரவக்கூடும். ஹமாஸ் செய்தது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கொள்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்தது’ என்று அவர் கூறினார். இதனால் அந்த பிராந்தியத்தில் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.

பாலஸ்தீனியர்களின் பலி 35ஆக உயர்வு
ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனம் தெற்கு காசாவில் பணியாற்றி வருகிறது. காசா பகுதியில் பாலஸ்தீனிய அகதிகளாக பதிவு செய்யப்பட்ட 13 லட்சம் மக்களுக்கு அடிப்படை சேவைகள் மற்றும் நிதியுதவி வழங்குகிறது. இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய 7 நாட்களில் இதுவரை கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. 650 பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.

2வது விமானமும் புறப்பட்டது
இந்தியர்களை மீட்டு வர இரண்டாவது விமானம் நேற்று மாலை டெல் அவிவ் புறப்பட்டது. மேலும் பல இந்தியர்களை மீட்க கூடுதல் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

காசாவில் இருந்து 24 மணி நேரத்திற்குள் 11 லட்சம் பேரை வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்ட நிலையில் காசா எல்லையை சுற்றிலும் ராணுவ பீரங்கிகளை இஸ்ரேல் குவித்து வருகிறது. எகிப்தின் ரபா பகுதி மட்டுமே தற்போது இஸ்ரேல் படைகள் இல்லாத இடமாக உள்ளது. ஆனால் பாலஸ்தீன பகுதியில் மீண்டும் மீண்டும் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதால் ரபா பகுதியை பாதுகாப்பாக வைக்க வேண்டிய நிலைக்கு எகிப்து தற்போது தள்ளப்பட்டுள்ளது.

எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல்-சிஸ்ஸி இதுபற்றி கூறுகையில்,’ ரபா வழியாக காசா மக்கள் எகிப்து வரலாம். தற்போது எகிப்தில் 90 லட்சம் அகதிகள் உள்ளனர். இந்த ஆண்டு சூடானில் இருந்து 3 லட்சம் பேர் எகிப்திற்கு தப்பி வந்தனர். தற்போது காசா மக்களும் வருவதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்’ என்றார்.

Check Also

வேலூர் மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா

வேலூர் மாவட்ட போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்களது அறிவுறித்தலின் பேரில் …