டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை மற்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக பெறபட்ட ஆவணங்களைக்கொண்டு சிபிசிஐடி எஸ்.பி நாகஜோதி நாமக்கல்லில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அவர் இன்று ஆய்வு நடத்த உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றிய விஷ்ணுபிரியா திருச்செங்கோடு டி.எஸ்.பி முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார்.
காதல் விவகாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமாரை சந்திந்து விஷ்ணுபிரியா தற்கொலை மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுகொண்டனர்.
தொடர்ந்து நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதி காவல்துறையினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இவ்வழக்கின் ஆவணங்கள் வழக்கு விபரங்கள் குறித்தும் விசாரணையை எவ்வகையில் மேற்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சிபிசிஐடி உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கின்றன.