2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சார்பில் அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, தயாளு அம்மாள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமரேந்திர சரண் முன்வைத்த வாதம்:

“வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள் பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில், அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்? இதை சிபிஐ நீதிமன்றத்தில் முறையிட்டபோதும் அதன் சிறப்பு நீதிபதி எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

 இதைக் கேட்ட தலைமை நீதிபதி எச்.எல். தத்து கூறியது: “தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஞாபக மறதியால் பாதிக்கப்படும் நபர் உணராதபோது அவரால் வழக்காட முடியாது என்பதை நீதிமன்றம் உணர்கிறது. ஆனால், இதுபோன்ற கோரிக்கையை சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டு அதன் சிறப்பு நீதிபதி திருப்தியடையும் வகையில் ஆவணங்களைத் தாக்கல் செய்யுங்கள். இந்த மனுவை தற்போதைய நிலையில் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று  கூறினார்.

கூடுதல் சாட்சிகள்:

இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் மத்திய அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்பட கூடுதல் நபர்களின் சாட்சியத்தைப் பதிவு செய்ய அனுமதி கேட்டு, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.

இதை சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி திங்கள்கிழமை விசாரித்த போது, சிபிஐ வழக்குரைஞர் கே.கே.கோயல் ஆஜராகி, “சிபிஐ மனு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டோர் பதில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றின் மீது பதில் அளிக்க கூடுதல் அவகாசம் தேவை’ எனக் கேட்டுக் கொண்டார். இதை ஏற்று இந்த மனு மீதான அடுத்த விசாரணையை வரும் நவம்பர் 10-ஆம் தேதி சிறப்பு நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் டிவிக்கும், சில தனியார் நிறுவனங்களுக்கும் இடையே ரூ.200 கோடி அளவுக்கு நிதிப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இந்தப் பரிவர்த்தனையை சட்டவிரோதம்’ என்று மத்திய அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் பி. அகர்வால், கரீம் மொரானி, கலைஞர் டிவி முன்னாள் மேலாண் இயக்குநர் சரத் குமார், தயாளு அம்மாள், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாகி அமிர்தம் ஆகிய 10 பேர் மற்றும் ஒன்பது நிறுவனங்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்துள்ளது.

அலைக்கற்றை விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் தயாளு அம்மாள் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் மீதான உத்தரவை வரும் 31-ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ளது.

Check Also

இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *