வரலட்சுமி நோன்பு– திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், கன்னிப்பெண்கள், விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் கிடைக்க வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பார்கள். இந்த வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு ஆடி மாதம் பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் இந்த விரதத்தை பெண்கள் அனைவரும் அனுஷ்டிப்பது சிறப்பான பலன்களைத் தந்தருளும்.
இந்த வரலட்சுமி நோன்பு தினத்தில்தான், பாற்கடலில் இருந்து மாலை வேளையில் மகாலட்சுமி தோன்றினாள் என்று கூறப்படுகிறது. இந்த விரதம் குறித்து மகாலட்சுமியே, சாருமதி என்ற பெண்ணின் கனவில் தோன்றி, விரதம் குறித்தும், அதை எப்படி அனுஷ்டிப்பது என்பது பற்றியும், இவ்விரதத்தை கடைபிடிப்பதால் எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பது பற்றியும் எடுத்துரைத்ததாகவும் புராணங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மகாலட்சுமி கூறியதைத் தொடர்ந்து சாருமதி, இந்த விரதத்தை கடை பிடித்து நற்பலன்கள் பெற்றாள். மேலும் இந்த விரதம் கடைப்பிடிக்கும் முறை பற்றி அவர் பலருக்கும் சொல்லிக் கொடுத்தாள். இந்த விரதமானது ஆந்திராவில் இருந்து காலப்போக்கில் தமிழகத்துக்கு வந்தது என்று சொல்லப்படுகிறது.
விரதத்துக்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து மஞ்சள் தண்ணீர் தெளித்து வைக்க வேண்டும். வீட்டின் பூஜை அறையில் ஓர் இடத்தில் சுத்தமான பலகையை வைத்து, அதன் மேல் கோலம் போட வேண்டும். கோலத்திற்கு நடுவில் ஒரு தட்டை வைத்து, அதில் நெல்லைப் பரப்பி வைக்க வேண்டும். அதன் மீது நிறைகுடத்தை வைத்து, குடத்துக்குப் பட்டுப் பாவாடை கட்டி, நகைகள் போட்டு அலங்கரிக்க வேண்டும். அலங்கரிக்கப்பட்ட பின்னர் அந்த கும்பத்துக்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, பூ வைப்பதோடு, அந்த கும்பத்திற்கு முன்பாக தேங்காய், பழம், கல்கண்டு, பலகாரங்கள், மலர்கள் போன்றவற்றை வைக்க வேண் டும். அவற்றோடு கும்பத்தின் முன்பு மகாலட்சுமியின் படத்தையும் வைக்க வேண்டும்.
மஞ்சள் தடவிய கயிற்றை கும்பத்தோடு வைத்து வழிபட வேண்டும். ‘வரலட்சுமி தாயே! என் வீட்டுக்கு வந்திருந்து என்றைக்கும், நீங்காமல் இருந்து வரம் கொடுத்தருள்வாய்’ என்று அன்னையை வேண்டிக்கொண்டு, நெய்விளக்கு ஏற்றி, வரலட்சுமி ஸ்தோத்திரத்தை சொல்லித், தூப– தீப ஆராதனைகளை செய்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக அக்கம் பக்கத்தில் வசிக்கும் சுமங்கலிப் பெண்களையும், கன்னிப் பெண்களையும் அழைக்க வேண்டும்.
பூஜை முடிந்ததும் நோன்புக் கயிற்றைக் கன்னிப் பெண்களின் வலது கரத்தில், சுமங்கலிப் பெண்கள் கட்டிவிட வேண்டும். சுமங்கலிப் பெண்களுக்கு, சுமங்கலிப் பெண்களே நோன்புக் கயிற்றைக் கட்டிவிடலாம். தொடர்ந்து பூஜையில் பங்கேற்று தாயாரை வழிபட்டவர்களுக்கு, மங்கலப் பொருட்களான மலர்ச்சரம், மஞ்சள், குங்குமம் போன்றவற்றைக் கொடுத்து உணவு அளித்து, தாங்களும் உணவருந்த வேண்டும்.
வரங்கள் பல தரும் வரலட்சுமி விரதத்தை கடைபிடிப்பதன் காரணமாக, அதை அனுஷ்டித்த கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அத்துடன் நல்ல கணவன் கிடைப்பார்கள். அதே போல் சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். இந்த விரதத்தை ஆண்டுகள் தவறாது வழிபட்டு வருபவர்களுக்கு, தாயாரின் அனுக்கிரகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆண்களும் கூட இந்த விரதத்தை, பெண்களின் நலனுக்காக செய்து வரலாம்.