காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் வீடுகளில் மலேசியன் போலிசார் சோதனைகளை நடத்தியிருக்கின்றனர்.
கடத்தப்பட்டதாக அல்லது விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகளான, ஸஹாரி அஹ்மது ஷா மற்றும் பரிக் அப்துல் ஹமித் ஆகிய இருவரின் கோலாலம்பூர் வீடுகளிலும் மலேசியப் போலிசார் சனிக்கிழமை சோதனைகளை நடத்தினர்.
அந்த விமானிகளின் குடும்ப வாழ்க்கை மற்றும் மனோநிலை ஆகியவைகள் குறித்து ஆராய இந்த சோதனைகள் நடத்தப்பட்டன என்று கூறப்படுகிறது.
இந்தச் சோதனைகள் குறித்த புதிய விவரங்கள் எதையும் போலிசார் தரவில்லை.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தொடர்பு சாதனக் கருவிகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டதாக மலேசியப் பிரதமர் கூறியதை அடுத்து இந்த சோதனைகள் நடந்தன.
விமானம் இதன் பின்னர் நடுவழியில் தனது பாதையை திடீரென்று மாற்றிக்கொண்டது என்று நம்பப்படுகிறது.
இந்த போயிங் 777 ரக விமானம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற் கொண்டிருந்தபோது, பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் ராடார் தொடர்பை இழந்தது.
ஆனால் ராடார் தொடர்பை இழந்த பின்னரும் சுமார் ஏழு மணி நேரத்துக்கு இந்த விமானம் பறந்திருக்கலாம் என்று செய்கோள் ஆதாரங்கள் காட்டுவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரஜாக் கூறியிருந்தார்.
இந்த விமானம் கஜக்ஸ்தானிலிருந்து இந்தியப் பெருங்கடல் பரப்பு வரை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இது ஒரு விமானக் கடத்தல் முயற்சி என்று கூறுவதைத் தவிர்த்த மலேசியப் பிரதமர், ஆனால் தாங்கள் ” எல்லா சாத்தியக்கூறுகளையும்” விசாரித்து வருவதாகக் கூறினார்.
இதனிடையே, அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகேயும், வங்காள விரிகுடாவிலும், இந்த விமானத்தைத் தேடும் வேலையை இந்தியா நிறுத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது. மலேசிய அதிகாரிகளின் வேண்டுகோளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அது கூறியிருக்கிறது.
தேடும் பணி குறித்து மலேசியாவிடமிருந்து மேலும் புதிய வேண்டுகோள்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்திய கடற்படையும், விமானப்படையும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதிகளிலும், வங்காள விரிகுடா பகுதியிலும் இந்தத் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டு வந்தன.
மலேசியா இப்போது இந்த ஒட்டுமொத்த தேடுதல் நடவடிக்கையையே பரிசீலனை செய்து வருவதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த விமானத்தை தேடும் முயற்சிகள் பற்றி தனக்கு ” சரியான மற்றும் முழுமையான” தகவல்களைத் தருமாறு, சீனா மலேசியாவைக் கோரியிருக்கிறது.
விமானத்தில் பயணம் செய்த 239 பேரில், 153 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் 38 மலேசியர்களும், அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், இந்தியா ,ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாட்டவர்களும் பயணம் செய்தனர்.
தலைமை விமானி ஸஹாரீ மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்தார். அவர் மிக அனுபவம் மிக்க விமானியாகக் கருதப்படுகிறார்.
இணை விமானி, பரிக், சமீபத்தில்தான் போயிங் ரக விமானங்களை ஓட்டும் விமானியாக பணி உயர்வு தரப்பட்டார். அவர் திருமணம் செய்து கொள்வது குறித்து பரிசீலித்துக் கொண்டிருந்தார் என்று கருதப்படுகிறது.