திருப்போரூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை விரத வழிபாட்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
திருப்போரூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, 2012-இல் பாலாலயம் செய்யப்பட்டு சன்னிதிகள் மூடப்பட்டு உற்சவருக்கு மட்டும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கோயிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதனையடுத்து கும்பாபிஷேகம் நடந்து முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை விரத வழிபாட்டையொட்டி அனைத்து சன்னிதிகளும் திறக்கப்பட்டு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கந்தசாமி திருக்கோயிலில் மூலவர் முருகனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்பட்டன. வழக்கத்துக்கு மாறாக கிருத்திகை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் ஏராளமானோர் முருகன் சன்னிதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்தனர்.
2 ஆண்டுகளாக காத்திருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை தற்போது கும்பாபிஷேகத்திற்குப் பின் வந்த இந்த கிருத்திகையில் மொட்டை அடித்தல், குழந்தைகளுக்கு எடைக்கு எடை போடுதல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றினர். வெளியூர் பக்தர்களும் பல்வேறு வாகனங்களில் வந்து முருகனை தரிசித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், மேலாளர் வெற்றிவேல், சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.