நவதிருப்பதி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள 9 முக்கிய இந்து வைணவதலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயராகும். இந்த ஒன்பது தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாக விளங்குகின்றன. இவை திவ்ய தேசங்களாகவும் உள்ளன.
நவக்கிரகங்கள் பொதுவாக இந்து சைவ வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிப்பன. நவதிருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவையாகக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவக்கிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.
சோழநாட்டில் அமைந்துள்ள நவக்கிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. இங்கு பெருமாளே நவக்கிரகங்களாகச் செயல்படுவதால் நவக்கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணிக் கரையில் இருபுறமும் அமைந்துள்ள 9 வைணவத் தலங்கள் “நவதிருப்பதி’ என அழைக்கப்படுகிறது.
அவை ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி.
1. ஸ்ரீவைகுண்டம்: சூரிய ஸ்தலம், மூலவர் வைகுண்டநாதன், தாயார்கள் – வைகுண்டநாயகி, சோரநாயகி, உற்சவர் – கள்ளபிரான்.
2. ஸ்ரீவரகுணமங்கை எனப்படும் நத்தம்: ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 2 கிமீ தொலைவு, சந்திரன் ஸ்தலம், மூலவர் – விஜயாசனபெருமாள் என்னும் பரமபதநாதன், தாயார்கள் – வரகுணவல்லி, வரகுணமங்கை, உற்சவர் – எம்இடர் கடிவான்.
3. திருப்புளியங்குடி: ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 3 கிமீ தொலைவு, புதன் ஸ்தலம், மூலவர் – பூமிபாலகர், தாயார்கள் – மலர்மகள், புளியங்குடி வல்லி, உற்சவர் -காய்சினவேந்த பெருமாள்.
4. இரட்டைத் திருப்பதியில் ஒன்று: ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 10 கிமீ தொலைவு, ராகு ஸ்தலம், மூலவர் – ஸ்ரீநிவாசன், தாயார்கள் – அலமேலுமங்கை, பத்மாவதி, உற்சவர் – தேவர்பிரான்.
5. இரட்டைத் திருப்பதியில் மற்றொன்று: கேது ஸ்தலம், மூலவர் – அரவிந்தலோசனர், தாயார் – கருத்தடங்கண்ணி, உற்சவர் – செந்தாமரைக்கண்ணன்.
6. பெருங்குளம்: ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 12 கிமீ தொலைவு, சனி ஸ்தலம், மூலவர் வேங்கடவானன், தாயார்கள் கமலாவதி, குழந்தைவல்லி, உற்சவர் – மாயக்கூத்தர்.
7. தென்திருப்பேரை: ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 8 கிமீ தொலைவு, சுக்கிரன் ஸ்தலம், உற்சவர் – நிகரில் முகில்வண்ணன், தாயார்கள் – குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார், மூலவர் – மகரநெடுங்குழைக்காதர்.
8. திருக்கோளூர்: ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 8 கிமீ தொலைவு, செவ்வாய் ஸ்தலம், மூலவர் – வைத்தமாநிதிப்பெருமாள், தாயார்கள்- குமுதவல்லி, கோளூர்வல்லி, உற்சவர் – நிக்சோபவித்தன்.
9. ஆழ்வார்திருநகரி: ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 5 கிமீ தொலைவு, குரு ஸ்தலம், மூலவர் – ஆதிநாதன், தாயார்கள்- ஆதிநாதவல்லி, திருகுருகூர் நாயகி, உற்சவர் – பொலிந்துநின்றபிரான்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் இக் கோயில்கள் அதிகாலை 6 முதல் இரவு 8 மணிவரை நடைதிறந்திருக்கும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நவதிருப்பதி கோயில்களின் செயல் அலுவலர் சிவராம்பிரபு தலைமையில் டிவிஎஸ் சீனிவாசா அறக்கட்டளையினர், கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, பணியாளர்கள் செய்து வருகின்றனர்.