இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 25-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
இதுகுறித்து இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி விடுத்துள்ள அறிக்கை:
கடந்தாண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையிலிருந்து எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்படவுள்ளன.
வரும் 25-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு திருக்குடை ஊர்வலம் தொடங்கவுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாகச் சென்று, மாலை 4 மணிக்குக் கவுனி தாண்டுகிறது. பின்னர் சால்ட் கொட்டகை (நடராஜா திரையரங்கம்), செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் ஃபாரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், காசி விஸ்வநாதர் கோயில் சென்றடையும்.
பின்னர், வெள்ளிக்கிழமை (செப். 26) ஐ.சி.எஃப், ஜி.கே.எம். காலனி, திரு.வி.க நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளுக்குச் செல்கிறது.
அதைத் தொடர்ந்து சனிக்கிழமை (செப்.27) பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி ஆகிய பகுதிகளுக்கும், ஞாயிற்றுக்கிழமை (செப்.28) பட்டாபிராம், திருநின்றவூர், மணவாள நகர், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கும் செல்கிறது.
அதையடுத்து திங்கள்கிழமை (செப்.29) திருக்குடைகள் திருப்பாச்சூர் வழியாக திருப்பதி சென்று மாடவீதி வலம் வந்து வஸ்திரம், மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
இதுகுறித்த தகவல்களுக்கு 044-65158708, 73730 99562 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.