ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 6 பேர் பலி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து சென்னையைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இதில் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகர், தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் வசிப்பவர் ராஜேஷ் (30). இவர் சென்னையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நேற்று திருமண நாள் என்பதால் குடும்பத்தாருடன் காரில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றனர்.

நேற்று மதியம் முருகன்(50) என்பவரது பரிசலில் ஏறி ராஜேஷ் உள்ளிட்ட 9 பேரும் சவாரி சென்றுள்ளனர். மணல்திட்டு அடுத்த தொம்பச்சிக்கல் என்ற இடத்தில் சென்றபோது் பரிசலுக்குள் தண்ணீர் புகுந்ததால் திடீரென பரிசல் கவிழ்ந்தது.

இதில், பரிசலில் பயணம் செய்த 9 பேரும் தண்ணீரில் விழுந்தனர். இதைக்கண்ட அப்பகுதியில் இருந்த பரிசல் ஓட்டிகள் சிவலிங்கம், ஆனந்த் ஆகிய இருவரும் உடனடியாக தண்ணீரில் குதித்து ராஜேஷ்(30), அவரது மனைவி கோமதி(29), இவர்களது மகன் சச்சின்(6) ஆகிய 3 பேரை காப்பாற்றியுள்ளனர்.

ராஜேஷின் மாமனார் கிருஷ்ணமூர்த்தி(60), இவரது மனைவி கவுரி(55), மகன் ரஞ்சித்(35), இவரது மனைவி கோகிலா(30), இவர்களது மகள் சுபிக்‌ஷா(1) மற்றொரு குழந்தை தர்ஷன்(3) ஆகிய 6 பேரும் நீரில் மூழ்கினர். அவர்களில் கவுரி, குழந்தை தர்ஷன் ஆகிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், பரிசல் ஓட்டிகள், காவல்துறையினர் தேடிவருகின்றனர். பரிசல் ஓட்டியை போலீஸார் தேடி வருகின்றனர்.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …