2ஜி விசாரணை, விலகியிருக்க சிபிஐ இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் தலையிடாமல் விலகியிருக்கும்படி, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடர்பாக வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

உத்தரவின் விவரம்:

“2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விசாரணை நடவடிக்கைகளில் புலனாய்வு அமைப்பின் உயரதிகாரி தலையிடுவதாக எழுந்துள்ள புகார்கள் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பிரதிநிதிகளை தனது இல்லத்தில் ரஞ்சித் சின்ஹா சந்தித்த நிகழ்வுகளை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த விவகாரத்தில் தனது நிலையை விளக்காமல், பார்வையாளர் குறிப்பேடு ஆவணங்களை மற்றொரு விசாரணை அதிகாரி (டிஐஜி சந்தோஷ் ரஸ்தோகி) பிரசாந்த் பூஷணிடம் அளித்ததாக நீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் தரப்பு பதிவு செய்ய முயன்ற குற்றச்சாட்டு ஏற்புடையதாக இல்லை.

இதுபோன்ற புகார்களைத் தெரிவிக்கும் முன்பாக, அதை நிரூபிக்கும் ஆதாரங்களை அவர் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் விரிவான உத்தரவைப் பிறப்பித்தால் அது சிபிஐயின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். எனவே, 2ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் ரஞ்சித் சின்ஹா தலையிடாமல் விலகியிருக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை மேற்பார்வை நடவடிக்கைகளை ரஞ்சித் சின்ஹாவுக்கு அடுத்த நிலையில் உள்ள உயரதிகாரி இனி கவனிக்க வேண்டும்’ என்று உத்தரவில் தலைமை நீதிபதி தத்து குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை காலையில் தொடங்கியதும் ரஞ்சித் சின்ஹாவின் வழக்குரைஞர் விகாஸ் சிங் ஆஜராகி கூறியதாவது: “ரஞ்சித் சின்ஹா வீட்டின் பார்வையாளர் குறிப்பேடுகளை பிரசாந்த் பூஷணிடம் சிபிஐ டிஐஜி சந்தோஷ் ரஸ்தோகி அளித்ததாக முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை’ என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

முகாந்திரம் உள்ளது:

இதையடுத்து, 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு சிறப்பு வழக்குரைஞராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆனந்த் குரோவர் நீதிபதிகளிடம் கூறியதாவது: “இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் பிரதிநிதிகளை ரஞ்சித் சின்ஹா சந்தித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட சிலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என அந்த வழக்குகளின் விசாரணை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்த போது, அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ரஞ்சித் சின்ஹா செயல்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிலரின் பிரதிநிதிகளை ரஞ்சித் சின்ஹா தொடர்ச்சியாக அவரது வீட்டில் சந்தித்தது சந்தேகத்துக்குரிய நடவடிக்கையாகும். மொத்தத்தில் ரஞ்சித் சின்ஹாவின் செயல்பாடு யாருக்கோ சாதகமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது’ என்றார். இதைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

“நீதிமன்ற ஆணையை மதிக்கிறேன்’

“2ஜி வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்கிறேன்’ என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கருத்துத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான சில மணி நேரத்தில் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“சிபிஐயின் நற்புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படாமல் இருக்க நான் சில முயற்சிகளை மேற்கொண்டேன். இந்த விவகாரத்தில் அதே நோக்குடன் உச்ச நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் எனக்கு எவ்விதச் சங்கடமும் இல்லை’ என்றார். ரஞ்சித் சின்ஹா தனது பதவியில் இருந்து வருகிற டிசம்பர் 2ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ அதிகாரிகள் குழுவுக்கு தலைமை நீதிபதி கண்டிப்பு

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிரான பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையைப் பார்வையிட சிபிஐ அதிகாரிகள் குழு, உச்ச நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வந்திருந்த செயலை தலைமை நீதிபதி எச்.எல். தத்து கண்டித்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, சிபிஐ சார்பில் வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் தொடர்ந்து ஆஜராவது குறித்து நீதிபதிகளிடம் விளக்கம் கேட்க ரஞ்சித் சின்ஹாவின் வழக்குரைஞர் விகாஸ் சிங் முற்பட்டார். அப்போது, பார்வையாளர் மாடத்தில் இருந்த சிபிஐ இணை இயக்குநர் அசோக் திவாரி தனது கையைத் தூக்கியபடி “இந்த விவகாரத்தில் நான் கருத்துக் கூற விரும்புகிறேன்’ என்றார்.

இதையடுத்து, அவரை வழக்குரைஞர் ஆஜராகும் பகுதிக்கு வரவழைத்த தலைமை நீதிபதி தத்து, “நீங்கள் ரஞ்சித் சின்ஹாவின் முகவரா? அல்லது அவரது ஊதுகுழலா?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து, பார்வையாளர் மாடத்தில் அமரும் வரிசையில் ஏர்செல் – மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி எஸ்.கே.சின்ஹா உள்பட ஐந்து அதிகாரிகள் இருந்ததைப் பார்த்த தலைமை நீதிபதி, “எதற்காக இவர்கள் எல்லாம் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர்?’ என்று கேட்டார். இதற்கு ரஞ்சித் சின்ஹாவின் வழக்குரைஞர் விகாஸ் சிங், “வழக்குரைஞர்களுக்கு உதவுவதற்காக அவர்கள் வந்துள்ளனர்’ என்றார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி தத்து, “சம்பந்தமில்லாமல் சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்துக்குள் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை’ என்று கண்டிப்புடன் கூறினார். இதையடுத்து, சிபிஐ இணை இயக்குநர் அசோக் திவாரி உள்பட சிபிஐ அதிகாரிகள் அனைவரும் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினர்.

Check Also

இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *