சென்னை மாநகராட்சியுடன் அம்பத்தூர் நகராட்சி இணைக்கப்பட்டு 3 ஆண்டாகிறது. 7வது மண்டலமான அம்பத்தூரில் 15 வார்டுகள் உள்ளன. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
அம்பத்தூர், கொரட்டூர், மண்ணூர்பேட்டை, மங்கலபுரம், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான முக்கிய சாலைகள், குறுக்கு சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. தற்போது பெய்து வரும் பருவ மழையால் சாலைகளும் சேறும் சகதியுமாக மாறி, மக்கள் நடமாட முடியாமல் உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகள் பெரும்பாலும் முடிந்தும் சாலைகள் போடப்படவில்லை. பல சாலைகள் டெண்டர் விடப்பட்டும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
மழை நிவாரண பணிகள் சரிவர நடைபெறவில்லை. பல இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் கழிவுநீர், மழை நீர் கலந்து நிற்கிறது. குப்பைகள் சரிவர அள்ளப்படாததால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. தெரு விளக்குகள் பல இடங்களில் எரியாததால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் வேலை முடிந்து இரவில் வீடு திரும்புவோர், டியூஷன் முடிந்து திரும்பும் பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.