திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை புதன்கிழமை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதரித்த திருநாள். எனவே அன்றைய தினம் அவரை வழிபட்டால் வருடம் முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும். வைகாசி விசாக திருவிழா அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றாலும், அறுபடை வீடுகளளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெகு விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படும்.
விழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.
விசாக திருநாளான நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை நடக்கிறது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் எழுத்தருள்கிறார். அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும், பால் குடம் சுமந்தும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை நோக்கி பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் கோயில் அருகேயுள்ள கடலில் புனித நீராடி முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். விழா தினத்தன்று திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.