தெலங்கானாவில் பள்ளிப் பேருந்துடன் ரயில் மோதி விபத்து: 20 மாணவர்கள் பலி

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர்.

மேடக் மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் இன்று காலை 9.10 மணியளவில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது.

காகடியா டெக்னோ பள்ளிக்குச் சொந்தமான பேருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, மசாய்பேட் கிராமம் அருகே ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த நான்டெட் – செகந்தராபாத் பயணிகள் ரயில் பேருந்து மீது மோதியது.

இதில் பேருந்து ஓட்டுநர், பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த மாணவர்கள், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெலங்கானா முதல்வ கே.சந்திரசேகர ராவ் அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஹரீஷ் ராவ் விரைந்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் சந்திரசேகர ராவ், சிறப்பான முறையில் மருத்துவ உதவி அளிக்குமாறு உத்தரவிட்டார். அவருடன் தலைமைச் செயலர் ராஜீவ் சர்மா, டிஜிபி அனுராக் சர்மா ஆகியோரும் இருந்தனர்.

உள்துறை அமைச்சர் இரங்கல்:

ரயில் மோதி பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு தெலங்கானா உள்துறை அமைச்சர் நைனி நரசிம்ம ரெட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இத்துயரச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சர் இரங்கல்:

தெலங்கானா விபத்து குறித்து மக்களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, “இந்தச் சம்பவம் மிகவும் துயரமானது, துரதிர்ஷ்டவசமானது. விபத்து குறுத்து மக்களவையில் இன்று பிற்பகல் விளக்கமளிக்கப்படும்” என்றார்.

தெலங்கானாவில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து மக்களவையில் ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா விளக்கமளித்தார்.

அப்போது அவர், “விபத்துக்கு காரணம் பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே. விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்” என்றார்.

முன்னதாக இன்று காலை மக்களவையில் பேசியபோது, தெலங்கானா சம்பவம் மிகவும் துயரமான சம்பவம் என கவுடா கூறியிருந்தார்.

செல்போன் பேச்சே விபத்துக்கு காரணம்

இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்து ஓட்டுநர் சம்பவம் நடைபெற்ற போது செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்தவுடனேயே, அங்கு விரைந்த தெற்கு மத்திய ரயில்வே பொது மேலாளர் பி.கே.ஸ்ரீவஸ்தவா கூறுகையில்: விபத்துக்குள்ளான பேருந்து தினமும் வேறு ஒரு பாதையில்தான் சென்றிருக்கிறது. இன்றைக்கு பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் ஓட்டுநர் பேருந்தை இந்த வழியாக இயக்கியுள்ளார்.

இது ஆளில்லாத லெவல் கிராசிங் என்றாலும் தேசிய நெடுஞ்சாலையை (என்.எச்.44-ஐ) ஒட்டி அமைந்துள்ளதால் ரயில் தூரத்தில் வந்தால் கூட பேருந்து ஓட்டுநர் அதனை கவனிக்கலாம். அதேபோல் ரயிலை இயக்குபவரும், பேருந்தை கவனிக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு சில நிமிடங்கள் காத்திருப்பதால் ஒன்றும் குறைந்தவிடாது. ஆனால் ஓட்டுநர் அலட்சியம் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.

Check Also

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உள்பட 5 பேர் பலி….

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பத்மநாபன் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *